மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு இன்று நடைபெற்றது.
கொழும்பு அமெரிக்கத் தூதுவர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ,வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த வாரம் அமெரிக்கா பயணமாக உள்ளதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என அமெரிக்கத் தூதுவர் மனோ கணேசனிடம் கூறியுள்ளார்.
இலங்கை பொருட்களை அதிகமாகக் கொள்வனவு செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளதாக ஜூலி சங் கூறியுள்ளார்.
இலங்கைக்கு சார்பாக இருக்கும் இந்த வர்த்தகம் தொடர்பில், அமெரிக்காவிலிருந்து அதிகமான பொருட்களை இலங்கை வாங்க வேண்டும் என அமெரிக்காவின் புதிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கலாம் என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.
குறிப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஆடை ஏற்றுமதி பொருட்களுக்கான பருத்தி ஆடை மூலப் பொருளை இலங்கை, அமெரிக்காவிலிருந்து அதிகமாக வாங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மலையக மக்கள் தொடர்பில் காணி உரிமை, வீட்டு உரிமை ஆகிய விவாகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான பார்வையைக் கொண்டிருக்கவில்லை என மனோ கணேசன் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஆரம்பித்த காணி, வீடு உரிமை பயணத்தைத் தொடர அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மனோ கணேசன் அமெரிக்கத் தூதுவரிடம் கூறியுள்ளார்.
தேசிய நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, இராணுவம் மீள்-அழைப்பு, காணாமல் போனோர் அலுவலகம், உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஆகிய விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னுரிமை வழங்காமல், முதலில் பொருளாதார சீரமைப்பு என்ற விவகாரத்துக்கே முன்னுரிமை வழங்குகிறது எனவும் ஆனால், பொருளாதார சீரமைப்பு, தேசிய விவகாரம் ஆகிய இரண்டையும் சமாந்திரமாக முன்னெடுக்கும் படி அரசாங்கத்தைக் கோருவதாக அமெரிக்கத் தூதுவரிடம் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா வருவாய், ஏற்றுமதி ஆகிய விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர கருத்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டுள்ளனர்.