மே 9 திகதி வன்முறைகள்: மனித உரிமை அறிக்கையால் சிக்கலில் காவல்துறை!
கடந்த மே 9 திகதி (2022) அன்று அமைதியான போராட்டக்காரர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் தவறியதன் மூலம் பொலிஸ் மா அதிபர் (IGP) கடமையை மீறியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) விசுவாசிகள் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததைத் தொடர்ந்து, அலரி மாளிகைக்கு அருகாமையிலும் காலி முகத்திடல் போராட்டப் பிரச்சார தளத்திலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட மனித உரிமை ஆணையம், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்கும் பொலிஸ் மா அதிபரின் கடமை மீறல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் போராட்டக்களங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட அனைத்து சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கத் தவறியமைக்காக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

