ஆட்ட நிர்ணய சதி; தொடர்ந்தும் விளக்கமறியலில் இந்திய பிரஜை பிரேம் தக்கர்
கைது செய்யப்பட்ட இந்திய பிரஜையான கோல்ட் மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டி, பல்லேகலவில் நடைபெற்று வரும் லங்காT10 கிரிக்கட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதியில் தனது அணியின் வீரர் ஒருவருக்கு ஆலோசனை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணய சதிக்கு பரிந்துரை
இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, இது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127வது பிரிவின் கீழ் ரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சந்தேக நபரை எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி உரிய இரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது அணிக்காக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் நாட்டு வீரர் ஒருவருக்கு, ஆட்ட நிர்ணய சதிக்கு பரிந்துரைத்ததாக சந்தேகத்தின் பேரில் இந்த இந்திய பிரஜை நேற்று விளையாட்டு ஊழல் தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.