யாழ் நகர் நகைக்கடை ஒன்றில் பாரிய கொள்ளை; அதிகாரிகள் என கூறி வந்தது யார்?
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் நேற்றைய தினம் (16) கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருமான வரி பரிசோதகர்கள் என கூறி இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வருமான வரி பரிசோதகர்கள் என கூறி மோசடி கும்பல்
விசாரணைகளை மேற்கொள்ள முதல் ,கடையின் கதவுகளை மூடி, கடையினுள் இருந்த கண்காணிப்பு கமராவில் கட்டுப்பாட்டு தொகுதியினை கழட்டி தம் வசம் எடுத்துக்கொண்டும் , கடையின் உரிமையாளர் மற்றும் , கடை ஊழியர்களின் தொலைபேசிகளை நிறுத்தி வைக்குமாறும் பணித்துள்ளனர்.
பின்னர், கடையில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை நகைகள் உள்ளதாகவும் , கணக்கில் காட்டாத பெருமளவான பணம் உள்ளதாகவும் தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே விசாரணைக்கு வந்துள்ளதாக கூறி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து கடையினை சோதனையிட வேண்டும் என கூறி, கடையில் காணப்பட்ட நகைகள், கடையில் இருந்த 30 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை தாம் எடுத்து செல்வதாகவும் அவற்றினை தமது அலுவலகத்திற்கு வந்து உரிய பற்று சீட்டுக்களை, கணக்குகளை சமர்ப்பித்து அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறி அவற்றினை எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர்.
நகைகளையும் பணத்தினையும் தாமே அலுவலகம் கொண்டு வருவதாக கடை உரிமையாளர் கூறி அவற்றை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்த போது , நகைகளை நீங்கள் கொண்டு வந்து அலுவலகத்தில் ஒப்படையுங்கள் , பணத்தினை நாம் எடுத்து செல்கின்றோம் என கூறி பணத்தினை எடுத்து சென்றுள்ளனர்.
அவர்கள் பணத்தை எடுத்து சென்ற பின்னரே , கடை உரிமையாளர் சக கடை உரிமையாளர்களிடம் கூறிய போதே , வருமான வரி பரிசோதகர்கள் என கூறி வந்த கும்பல் மோசடி கும்பல் என தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் யாழில் பரபரப்பாக இயங்கும் நகைக்கடைகள் உள்ள கஸ்தூரியார் வீதியில் , இவ்வாறான துணிகர கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.