இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பில் வெளியான அதிரடி தகவல்
2024 ஜனவரி - நவம்பர் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2025 ஜனவரி - நவம்பர் காலப்பகுதியில் விமானப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி - நவம்பர் காலப்பகுதியில் சர்வதேச விமானப் பயணிகளின் கையாளுதல் (International passenger movement) 9.23 மில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 15.20% வளர்ச்சியாகும்.

அதேபோல், 2025 ஜனவரி - நவம்பர் காலப்பகுதியில் 58,454 சர்வதேச விமானக் கையாளுதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.64% அதிகரிப்பாகும். மேலும், 2025 ஜனவரி - நவம்பர் காலப்பகுதியில் சுமார் 2.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் வருகை தந்துள்ளனர்.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16.73% வளர்ச்சியாகும்.
புதிய அரசாங்கம் பதவியேற்றதுடன் விமானப் போக்குவரத்துத் துறைக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும், அமைச்சர்களின் வழிகாட்டலின் கீழ் முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பால் இந்த மைல்கற்களை எட்ட முடிந்தமை இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையின் மறுமலர்ச்சிக்கான அறிகுறி எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.