உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர் வீழ்ச்சி; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,367.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.56 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை பாரிய வீழ்ச்சியைக் கண்டு வந்தது. அதனடிப்படையில் இன்றும் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றின் மிகப்பெரிய பொருளாதார அதிர்ச்சியை உருவாக்கும்
அதேவேளை உலக தங்க சபையின் (World Gold Council) கணிப்புப்படி, மனித வரலாற்றில் இதுவரை சுமார் 219,880 டன்கள் தங்கம் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் சுமார் $4,454 ஆக உள்ளது. இந்நிலையில் ஒருவேளை அனைத்து முதலீட்டாளர்களும் தங்களது தங்கத்தை விற்க முற்பட்டால், அது வரலாற்றின் மிகப்பெரிய பொருளாதார அதிர்ச்சியை உருவாக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 200,000 டன் தங்கம் ஒரே நேரத்தில் சந்தைக்கு வரும்போது, அதற்கான கேள்வி (Demand) குறைந்து வழங்கல் (Supply) அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை அதிரடியாக வீழ்ச்சியடையும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வர்த்தக நிலையங்கள் இந்த சரிவைக் கட்டுப்படுத்த தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தங்கத்தின் விலை குறைந்தால், சுரங்க நிறுவனங்கள், நகை உற்பத்தியாளர்கள் மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் குறிப்பிடத்தக்கது.