அர்ஜென்டினாவின் வெற்றியின் ரகசியம்: கீப்பர் மார்ட்டினெர்ஸின் இந்த செயல் தானா?
அர்ஜென்டினாவின் வீரர்கள் தங்கள் நான்கு பெனால்டி சூட் அவுட் முயற்சிகளையும் நிதானமாக கோலாக்கினார்கள். அவர்கள் தங்களுடைய பணியைக் கச்சிதமாகச் செய்திருந்தாலும், கோல் கீப் மார்ட்டினெர்ஸ் பிரான்ஸ் ரசிகர்களின் இதயங்களை உடைத்துவிட்டார். அவ்வளவுக்கும் அதை அவர் கூலாக செய்தார் என்பதுதான் சுவாரஸ்யமானது.
போட்டி ட்ராவில் முடிய இறுதியாக பெனால்டி ஷூட் அவுட்டின்போது, அவர்மீது தான் அதிக அழுத்தம் இருந்தது. சொல்லப் போனால், அவர் கைகளில்தான் அர்ஜென்டினாவுக்கு வெற்றியா? தோல்வியா? என்பதைத் தீர்மானிக்கும் தருணமே இருந்தது.
ஆனால், அவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், எதிரணி வீரர்கள் ஒவ்வொரு முறை பெனால்டி ஷாட் அடிக்க வந்தபோதும் அவர் ஆடிய ஆட்டம் பிரான்ஸ் வீரர்களை அச்சுறுத்தியது.
எம்பாப்பே போட்டியின் நடுவிலேயே மார்ட்டினெஸுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்திருந்தார். ஆகவே கடைசியிலும் ஷூட் அவுட்டை தொடக்கி வைத்த எம்பாப்பே, அதை கோலாக்கியதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
அந்த கோலையும் கூட கைக்கு எட்டும் தூரத்தில், மார்ட்டினெஸின் தடுப்பு முயற்சியின்போது அவர் கைகளில் பட்டு உள்ளே சென்றது. அவர் எடுத்த அந்த முயற்சியே பிரான்ஸ் அணியினரைக் கலங்க வைத்திருக்க வேண்டும்.
எம்பாப்பே கோல் அடித்திருந்தாலும், அதைத் தடுக்க அவர் எடுத்த முயற்சியிலேயே போட்டியின் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து அடுத்ததாக கிங்ஸ்லி கோமன், ஷாட் அடிக்க வந்தபோது, அவருடைய அமைதியை மார்ட்டினெஸின் கூலான ஆட்டமும் அமைதியான அணுகுமுறையும் குலைத்தன.
ஆரேலியன் சூயிமென்னி, அடுத்ததாக அவருடைய கோல் வாய்ப்பை எடுக்கச் சென்றபோது, அதையும் தவிடுபொடியாக்கினார் அர்ஜென்டினாவின் அந்த உயரமான கோல் கீப்பர்.
இந்த இடத்தில், மார்ட்டினெஸின் உடல் அமைப்பும் அவருக்கு நன்றாகவே உதவியது. அவரால் கோல் போஸ்டுக்குள் நன்கு இடதும் புறமும் வேகமாக நகர்ந்து, பெரிதாகத் தன்னை அலட்டிக் கொள்ளாமல் செயல்பட முடிந்தது.
மார்ட்டினெஸ் பெனால்டி ஷூட் அவுட் கோல்களை தடுக்கும்போது, ஒரு நடனம் ஆடுவார். பாஹ்....அந்த நடனம் ரசிகர்களுக்கு வெற்றிக் களிப்பைக் கொடுக்கும் அதேநேரத்தில், எதிரணிக்கு கலக்கத்தையும் கொடுக்கக்கூடியது.
ஏனெனில், அந்த நடனத்தில், “யாராக இருந்தாலும் நான் எதிர்கொள்வேன்” என்ற நம்பிக்கை பிரதிபலிக்கும். கோமன், சூயிமென்னி ஆகியோரின் கோல்களை அவர் தடுத்தது, அதுவரை தூரமாக இருந்த அர்ஜென்டினாவின் வெற்றியை, உண்மையாகவே மிக அருகில் கொண்டு சென்றது.
அவர்களைத் தொடர்ந்து கோலோ முவானி அடுத்த பெனால்டியை கோல் அடித்திருந்தாலும்கூட, அதற்கு அடுத்ததாக அர்ஜென்டினா தரப்பில் கொன்சாலோ மோன்டியெல் அடித்த நான்காவது பெனால்டி கோலின் மூலம் அவர்கள் தங்கள் வெற்றியை உறுதி செய்தார்கள்.
இங்கிலாந்தின் முன்னாள் மிட்ஃபீல்டர் ஜெர்மைன் ஜெனாஸ், “பிரான்ஸ் ஷூட் அவுட்டில் ஷாட் அடிக்க முயன்ற போதெல்லாம், அவர்களுடைய முயற்சியின்மீது மார்ட்டினெஸ் உளரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
“எமிலியானோ மார்ட்டினெஸ், மிகவும் நேர்மறையான நபர். அவர் தமது அணியிடம் சில பெனால்டிகளை தடுக்கப் போவதாகக் கூறியிருந்தார்” என்று கூறினார் அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி.
ரஷ்யாவில் நடந்த கடைசி தொடரில், பிரான்ஸ் அர்ஜென்டினாவை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நாக் அவுட் செய்து வெளியேற்றியது. அப்போதே மார்ட்டினெஸ் தனது சகோதரரிடம் “2022 உலகக் கோப்பையில் நான் இதற்கு பதிலடி கொடுப்பேன்” என்று உறுதியளித்திருந்தார்.
அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார். வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டார்.