திருமண விளம்பரங்களை தடை செய்யும் புதிய சட்டம் தொடர்பான செய்திகள் பொய்யானது ; அமைச்சு விளக்கம்
சாதி குறிப்பிட்டுத் திருமண விளம்பரங்களை வெளியிடுவதைத் தடை செய்யும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதாகக் கூறி வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு விளக்கமளித்துள்ளது.
அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கடந்த நவம்பர் 23ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்திச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகச் செயலாளர் திலிணி குணவர்தன விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலின அடிப்படையிலான வன்முறை
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாள் தேசிய செயற்பாடு குறித்த ஊடகச் சந்திப்பில், திருமண விளம்பரங்களில் சாதி போன்ற விடயங்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், திருமண விளம்பரங்கள் போன்றவற்றில் தனிப்பட்ட முறையில் புறக்கணித்துச் செயற்படக்கூடிய விடயங்கள் உள்ளதாகவும், அதேநேரம் சமூகத்தையும் எதிர்கால சந்ததியினரையும் தவறாக வழிநடத்தும் மூட நம்பிக்கை மற்றும் கீழ்த்தரமான விளம்பரங்களைக் கட்டுப்படுத்தவே ஊடகங்களுக்கு நெறிமுறைக் கோவை சட்டத்தைக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டார்.
அமைச்சரின் கருத்து எவ்வகையிலும் திருமண விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவோ அல்லது எந்தவொரு கலாசார அடையாளத்தையும் விமர்சிப்பதாகவோ, தடை செய்வதாகவோ அமையவில்லை.