தலைவருடைய பெயரை வைத்து பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது: இரா.சாணக்கியன்(Video)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய பெயரை வைத்துக் கொண்டு பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாகவும் தலைவர் உயிரோடு இருந்தால் நேரடியாக வந்து மக்களுக்குத் தெரிவிப்பார் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதற்கான கூட்டம் நேற்றைய தினம் (14.02.2023) நடைபெற்றுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய பெயரை வைத்துக் கொண்டு பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. தலைவர் உயிரோடு இருந்தால் தலைவர் நேரடியாக வந்து மக்களுக்குத் தெரிவிப்பார்.
மேலும் தலைவரை வைத்துக்கொண்டு பலர் அரசியல் செய்வதற்கு தற்போது முயற்சி எடுக்கின்றனர்.
சமகாலத்திலே இலங்கையில் நடக்கின்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது பிக்குமார்கள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக வந்து நின்று 13ஆவது திருத்தச் சட்டத்தை எரித்துவிட்டு மறுநாள் காலையிலே அவர்களுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கின்றார்கள்.
அதே நேரத்தில் இப்படியான ஒரு செய்தி வந்துள்ளது.
தலைவர் இருப்பதாகக் கூறும் பழ.நெடுமாறனுடைய செய்தியில் சந்தேகம் இருக்கின்றது. நான் பழ.நெடுமாறனைப் பிழையாகக் கூறவில்லை. ஆனால், தலைவருடைய விடயங்கள் வருவதென்றால் ஒரு அதிரடியாகத்தான் இருக்கும் என்பதைத்தான் நான் கூற விரும்புகின்றேன்.
தேர்தல் நடக்கும் என்கின்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் எங்களுடைய தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் தேர்தல் நடக்குமா? நடக்காதா என்பது தொடர்பாக நாங்கள் அச்சப்படத் தேவையில்லை தேர்தல் ஆணைக்குழு அதற்கான திகதியை அறிவித்துள்ளது. நேற்றைய தினம் பொலிஸாரும் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் ஜனநாயகம் இருந்தால் கட்டாயமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தாவிட்டால் இந்த அரசாங்கம் பாரிய எதிர்ப்புக்கு முகம் கொடுக்கும். தேர்தலைத் தொடர்ந்த பிற்போடப்பட்டால் ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கு குறையுமே தவிர அவர்களுடைய செல்வாக்கு அதிகரிக்காது. நான் ரணில் விக்ரமசிங்கவாக இருந்தால்.... நான் இந்த நாட்டின் தலைவராக இருந்தால் இருந்தால், இந்த தேர்தலை உடனடியாக நடத்துவேன். இவ்வாறான ஆலோசனையைத் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு என்னால் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.





