மனோ, திகா இற்கு செக் வைத்த ராதா!
மனோகணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்றால் கூட்டணியிலிருந்து ராதாகிருஸ்ணன் வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வக்கட்சி அரசில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றும் கொள்ளும் முடிவை ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்பன எடுக்கும் பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து மலையக மக்கள் முன்னணி வெளியேறும் என அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி அரசாங்கம்
சர்வக்கட்சி அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளாமல், எதிரணியில் இருந்தவாறு, சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்க வேண்டும் என்ற முடிவை கூட்டணியின் பங்காளிக்கட்சிகளுள் ஒன்றான மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ளது.
இது தொடர்பில் முன்னணியின் தலைவர் வீ . இராதாகிருஷ்ணனால் கூட்டணியின் தலைவருக்கு கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவை ஆதரித்துவிட்டு, அமைச்சு பதவிகளுக்காக ரணிலை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம் என மலையக மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
மலையக மக்கள் முன்னணி வெளியேறும்
எனவே, கூட்டணியில் உள்ள ஏனைய இரு கட்சிகளின் தலைவர்களும் அமைச்சு பதவிகளை பெற்றால், கூட்டணியில் இருந்து மலையக மக்கள் முன்னணி வெளியேறும் நிலைப்பாட்டிலேயே உள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இது தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
அதேசமயம் பங்காளிகளின் செயற்பாடுகள் தொடர்பில் மலையக மக்கள் முன்னணி கடும் அதிருப்தியில் இருப்பது உறுதியென அக்கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.