மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
மன்னார் காற்றாலை திட்டம் இரத்து செய்யப்படவில்லை என அதானி குழுமம் அறிவித்துள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் அதானி நிறுவனம் செயற்படுத்த முன்மொழியப்பட்ட 484 மெகாவோட் காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தையும் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும் இந்தத் தகவல்கள் பொய்யானவை என அதானி குழுமத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைச்சரவையின் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை மறு மதிப்பீடு செய்யும் தீர்மானம், புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிலையான மறுஆய்வு செயல்முறை என்றும்,
நாட்டின் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுடன் இணக்கத்தை உறுதி செய்வதே இந்த மதிப்பாய்வின் நோக்கமாகும் என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இலங்கையின் பசுமை எரிசக்தி துறையில் 1 பில்லியன் டொலரை முதலீடு செய்ய அதானி குழுமம் உறுதிபூண்டுள்ளதாகவும் அந்த குழுமத்தின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.