தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம்: காணாமல்போன கடற்படை வீரர் சடலமாக மீட்பு!
மன்னார் - முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றிவரும் கடற்படை வீரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் (04-01-2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த கடற்படை வீரர் முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட கடற்படை வீரர் 33 வயது உடையவர் எனவும் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முள்ளிக்குளம் கடற்படை முகாமில் உள்ள கடற்படையினரின் விடுதியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குறித்த கடற்படை வீரர் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த கடற்படை வீரர் கடந்த 2-ம் திகதி மதியம் கமுகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற நிலையில் அவர் மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது கணவர் காணாமல் போனமை தொடர்பில் அவரது மனைவி நேற்று (03-01-2024) சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த கடற்படை வீரர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிலாபத்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.