இன்னொரு பேரழிவை நோக்கி மனித இனம்; நிபுணர்கள் அச்சம்!
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களில் சரிபாதி பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், நாம் இன்னொரு பேரழிவை நோக்கி மெதுவாக நகர்வதாக நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 2003ல் இருந்து பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 860 நபர்களில் 53% பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், கோழி பண்ணைகளை நாம் பெருந்தொற்றை உருவாக்க பயன்படுத்துகிறோமா என்ற அச்சத்தை பிரித்தானிய நிபுணர் ஒருவர் முன்வைத்துள்ளார்.
பறவைகளிடமிருந்து விலங்குகளுக்கு காய்ச்சல்
தற்போது பறவைகளிடமிருந்து விலங்குகளுக்கு காய்ச்சல் பரவும் நிலையிலேயே இந்த அச்சம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் , விலங்குகளுக்கும் பறவைக் காய்ச்சல் பரவும் இந்த சூழலில், இந்த தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் பிரித்தானிய நிபுணர் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க, அது உருமாற்றம் காணும் வாய்ப்பும் அதிகமாகும்க் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதோடு இதில் கவலைப்படும் விடயம் என்னவென்றால், இன்னமும் இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை என்பது தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை 1997 ல் ஹொங்ஹொங் மற்றும் சீனாவில் தான் முதல் முறையாக மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த மாதம் கம்போடியாவில், பறவைக் காய்ச்சலால் 11 வயது சிறுமி ஒருவர் இறந்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அச்சிறுமி இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டதுடன், காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றால் அவதிப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.