பெண் மருத்துவரை தகாத முறையில் தொட்டவருக்கு நேர்ந்த கதி!
களுத்துறையில் உள்ள நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி, அங்கு பணியாற்றும் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பதில் நீதவான் பந்துல வீரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சமகிபுரம், மஹகமவில் உள்ள தென்னஹேன பகுதியைச் சேர்ந்த அந்த நபர், தலையில் ஏற்பட்ட காயங்களுடன் முதலில், பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாகொட போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

நோயாளியின் செயல் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு
நோயாளி சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (14) புத்தாண்டு தினத்தன்று மாலை ஒரு பெண் பயிற்சி மருத்துவர், நோயாளியின் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தபோதே மருத்துவர், நோயாளியால் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, நோயாளியின் செயல் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை, குறித்த நபருக்கு சிகிச்சை தேவைப்படுவதால் அவர், பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், களுத்துறை பதில் நீதவான், மருத்துவமனைக்குச் சென்று, குற்றஞ்சாட்டப்பட்ட நபரை கண்காணித்ததையடுத்தே, விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.