ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞன்; சமூகவலைத்தளங்களில் குவியும் பாராட்டு!
ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
பீகார் மாநிலம் பக்ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோலு யாதவ். இவர், அண்மையில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது, அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார்.

பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம்
யாசகம் பெற்ற பெண்னை பயணிகளில் சிலர் அவரை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர், ஆபாசமான முறையில் பேசியுள்ளனர். இதனால், அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகி, கூனி குறுகியுள்ளார்.
இதைக் கண்ட கோலு யாதவ், பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து மகனின் மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர், அந்த பெண்ணுக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்க சம்மதித்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலையை முழுமையாக புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
‘மனிதநேயம், பச்சாதாபம் மற்றும் விதி ஒன்றாக வருவதற்கான அரிய எடுத்துக்காட்டு’ என்று, கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் சமூகவலைத்தளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.