காட்டு யானை தாக்கியதில் நபர் உயிரிழப்பு
மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதியில் சின்னப்புல்லுமலை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த சோமசுந்தரம் அரிச்சந்திரன் (59 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சின்னப்புல்லு மலை கிராமத்தில் தோட்டத்தில் தங்கி வேலை செய்யும் குறித்த நபர் வழமைபோல் தோட்டத்தின் வாடியில் உறங்கிக் கொண்டிருந்தவேளை இரவு வந்த காட்டு யானை வாடியை உடைத்துள்ளது.
உறக்கத்திலிருந்து விழித்து வாடியிலிருந்து தப்பி ஓடியபோது யானை அவரை துரத்தி தாக்கியுள்ளது. தாக்கியதில் அவர் நிலத்தில் விழுந்தபோது முகத்தில் காலால் மிதித்துள்ளது. யானையின் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் விசாரணை நடத்தியதுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.