தேயிலை தொழிற்சாலையில் துயர சம்பவம் ; தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குடும்பஸ்தர்
தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் விழுந்த நபர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த கிட்ணன் விஜயகுமார் என்ற இரண்டு குழந்தைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில், உயிரிழந்தவரின் சடலம் மவுஸ்சாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி பார்த்த பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தேயிலைக் கொழுந்து அரைத்துக் கொண்டிருந்த வேளையில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும் அப்பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.