இலங்கையில் துப்பாக்கி முனையில் இரு பெண்கள் உட்பட கைதான ஆண் ; வீட்டிற்குள் காத்திருந்த பெரும் அதிர்ச்சி
கிரிஉல்ல பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணிக்க முயன்ற சொகுசு கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலுக்கமைய, அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து மேலும் போதைப்பொருளும், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கார் ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை 22 அன்று காலையில் கிரிஉல்ல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்று கிரிவுல்ல நகரத்திலிருந்து காரைப் பின்தொடர்ந்து சென்று பண்ணல நகரில் வைத்து அதனை மறிக்க முயன்றது.

மேலதிக விசாரணை
அப்போது பொலிஸாரின் உத்தரவை மீறி, உத்தியோகத்தர்களையும் விபத்துக்குள்ளாக்கித் தப்பியோட முயன்றதால், காரின் சக்கரத்தை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
எவ்வாறெனினும் துப்பாக்கிச் சூட்டையடுத்து கார் நிறுத்தப்பட்ட போதிலும், சந்தேகநபர்கள் காரின் கதவை திறக்க மறுத்தமையால் பொலிஸார் காரின் முன் இடதுபக்கக் கண்ணாடி உடைத்து, அந்த வாகனத்தில் பயணித்த ஒரு ஆண் மற்றும் இரு பெண்களை கைதுசெய்திருந்தனர்.
இதன்போது காரிலிருந்து 15 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 9,24,770 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டதுடன், அவர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான சந்தேகநபர்கள் நெலும்தெனிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வரும் 36 வயதுடைய ஆண் ஒருவரும், 39 மற்றும் 16 வயதுடைய இரு பெண்களுமாவர்.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களுக்கு அமைய, சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டைச் சோதனையிட்ட அதிகாரிகள் அங்கிருந்து 62 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 16,80,000 ரூபா பணம், போதைப்பொருள் பொதி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட 500 போத்தல் மூடிகள், வெளித்தெரியக் கூடிய குழாய் மற்றும் 2,235 பிளாஸ்டிக் குழாய்கள் என்பவற்றை மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிரிவுல்ல பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.