போலி யூரோ நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகரில் போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை மாற்றுவதற்காக சந்தேகநபர் வரவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (14) பிற்பகல் அவரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 200 யூரோ பெறுமதியான 9 போலி நாணயத்தாள்களும், 100 யூரோ பெறுமதியான 7 போலி நாணயத்தாள்களும் உட்பட மொத்தம் 16 போலி யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பைச் சேர்ந்த தனது மைத்துனர் குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்களை தன்னிடம் வழங்கியதாகவும், அவை போலியானவை என்பது தனக்குத் தெரியாது என்றும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.