பசிலுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு ; பரபரப்பை கிளப்பிய சம்பவம்
மல்வானையில் உரிமையாளரின்றி காணப்படும் காணி மற்றும் சொகுசு வீடு உள்ளிட்ட சொத்துக்களை பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்குமாறு கோரி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை (14) போராட்டத்தில் ஈடுபட்டது.
"மக்களிடமிருந்து திருடப்பட்ட சொத்துக்கள் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்படும்" என்ற தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் கால வாக்குறுதியை நினைவூட்டி மாணவர்கள் இந்த விழிப்புணர்வுப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இடவசதி பற்றாக்குறை
இடவசதி பற்றாக்குறையாக உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களின் தேவைகளுக்காகவும் இந்தச் சொத்துக்களை அரசாங்கம் உடனடியாக பயன்படுத்தவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 15 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலப்பரப்பில் இந்த சொகுசு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த இல்லத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் குறித்த இல்லத்துக்கு எவரும் உரிமை கோராததால், இந்தச் சொத்து நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன், பின்னர் இந்த இல்லத்தை ஏலத்தில் விடுவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பொருளாதார நெருக்கடி காரணமாக காலி முகத்திடலில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்ட காலப்பகுதியில் ஒரு குழுவினரால் இந்த இல்லத்துக்கு தீ வைக்கப்பட்டதில், இல்லத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
பின்னர், இந்த இடத்தில் 'சர்வதேச நீதிபதிகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்' ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், நீண்ட காலமாக அத்திட்டம் செயற்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில்தான், கைவிடப்பட்டுக் கிடக்கும் இந்த மல்வானை இல்லத்தை மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.