இலங்கைக்கு வருகை தரவுள்ள மலேசியா ஆளுநர்
இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பல தசாப்த கால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் நாளை திங்கட்கிழமை (29) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
மலாக்கா மாநிலத்திற்கும் இலங்கைக்குமிடையே பல நூற்றாண்டுகள் பழமையான வர்த்தக மற்றும் கலாசாரத் தொடர்புகள் காணப்படுகின்றன.

விஜயத்தின் முக்கிய நோக்கம்
இதனை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட ஆன்மீக மற்றும் பாரம்பரிய சுற்றுலாவை இருதரப்பிலும் ஊக்குவிப்பது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
மலேசியாவின் 'மலேசியா வருகை 2026' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பயணிகளை மலாக்கா மாநிலத்திற்கு ஈர்ப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் குறித்தும் இதில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் மருத்துவமனை கட்டுமானங்களுக்காக மலாக்கா மாநில அரசு பல்வேறு உவிகளை வழங்கி ஆதரவளித்திருந்தது.
மேலும், மலாக்கா ஆளுநரின் சர்வதேச மாணவர்களுக்கான அறக்கட்டளையின் கீழ், இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் கொழும்பு சந்திப்புகளில் உடன்பாடுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா மற்றும் கல்விக்கு மேலதிகமாக, இரு நாடுகளுக்கும் இடையில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மற்றும் புதிய வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் இலங்கைத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
மலாக்கா ஆளுநரின் இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, இலங்கை மற்றும் மலேசியாவின் மலாக்கா மாநிலத்திற்கு இடையிலான நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதோடு, இருநாட்டு மக்களுக்குமிடையிலான உறவையும் பலப்படுத்தும் என தூதரக மட்டங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.