பல மில்லியன் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்
2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் கீழ் இலங்கை பொலிஸாரின் பங்களிப்பு குறித்த அண்மைக்கால தகவல்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (31) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சட்டவிரோதச் சொத்துக்கள்
இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வெளிப்படுத்தினார்.
மேலும், 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான கடந்த சில மாத காலப்பகுதியில் 772 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.