இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய மைத்திரி!
இன்றைய தினம் (15-08-2022) 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்து முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, (Maithripala Sirisena) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போரின் வெளிச்சம் இலங்கையின் சுதந்திரத்தை வெல்வதற்கு பெரும் உதவியாக இருந்ததை இந்த தருணத்தில் மரியாதையுடன் நினைவு கூர்வதாக முன்னாள் ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் கடந்த தசாப்தங்களிலும் இந்தியக் குடியரசு இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் நம்பகமான நண்பராக வழங்கிய பலத்தை இந்த வரலாற்று தருணத்தில் நினைவு கூர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மிகவும் இக்கட்டான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், இந்திய பிரதமர் தலைமையிலான இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது எனவும், இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி உரிய கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.