சிறை சென்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ; கைதால் நாம் முடங்க மாட்டோம்!
நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், அவர் இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இதன்போது மேலும் கூறுகையில்,

இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல...
இச் சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர் எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்ஷவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்ஷ இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளதாகவும், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
இக் கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது எனக் கூறிய அவர், இச் சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
முதலாம் இணைப்பு
இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவரது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
இலங்கை விமான நிறுவனத்தின் விமானக் கொள்வனவு தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்ஷவை சந்திப்பு
பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்க்ஷவை செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்ஷவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.