ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் ; இன்று விசாரணைக்கு ஆஜராகும் மஹிந்த ராஜபக்ஷ
ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று விசாரணை செய்யவுள்ளது.
இதற்காக செவ்வாய்க்கிழமை (12) முற்பகல் 9.30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த ஆணைக்குழு முன் ஆஜராவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உறுதிப்படுத்தினார்.
ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றபோது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பியங்கர ஜயரத்ன மற்றும் அந்த அமைச்சின் செயலாளராக இருந்த விலி கமகே ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்தத் தீர்மானித்திருப்பதாகக் கடந்த வாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
ஒற்றை வாக்கால் வென்ற TVK வேட்பாளருக்கு நடந்த சம்பவம் ; ஆட்சியை பிடித்தும் உயர் நீதிமன்றம் வரை சென்ற சிக்கல்
அதன்படி திங்கட்கிழமை (11) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் விலி கமகேவை 4 மணி நேரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை செய்து வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக்கொண்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.
அதன்படி அந்த வாக்குமூலத்தில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் இதற்கு முன்னர் விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை மையப்படுத்தி இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்தது.
ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல்களின் போது பெறப்பட்ட லஞ்சப் பணத்தில் 6 கோடி ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பணமாகக் கையளிக்கப்பட்டதாக இந்த வழக்கின் முதல் சந்தேகநபராக இருந்த, தற்போது மர்மமான முறையில் மரணமடைந்திருக்கக்கூடிய கபில சந்திரசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குத் தெரிவித்திருந்தார்.
அதனை விட இந்த விவகாரத்தில் எஸ்.எல். அக்ரோ எனும் நிறுவனம் ஊடாக இலஞ்சமாகப் பெறப்பட்ட பணம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அதன் ஒரு பகுதி ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகச் செலவு செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.