மஹிந்த ராஜபக்ஷவை நீக்க வேண்டும்....அதிபரிடம் வலியுறுத்திய எம்.பி. க்கள்
இலங்கையில் அதிபரின் அலுவலகத்தை மக்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வரும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை அமைக்குமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் மந்தநிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பட்டியலையும் எம்.பி.க்கள் இலங்கை அதிபரிடம் சமர்பித்தனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன.
இதையடுத்து ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். அதனையடுத்து, அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் புதிய அமைச்சரவையை அமைக்குமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
ஆனால், இதை கட்சியினர் ஏற்கவில்லை. ஆளும் கட்சியைச் சேர்ந்த 12 பேர் உட்பட 42 எம்.பி.க்கள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் கடும் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாட்டின் நிலைமைக்கு அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையே காரணம் என இலங்கை மக்கள் குற்றம் சுமத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ஷ அரசு பதவி விலகக் கோரி ஏராளமான இளைஞர்கள் அதிபர் அலுவலக நுழைவாயிலை சூழ்ந்து கொண்டனர்.
இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், அதிப கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று எம்.பி.க்கள் குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியது.
இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கி, மக்கள் எழுச்சியை அடக்குவதற்கு உடனடியாக புதிய அமைச்சரவையை அமைக்குமாறு வலியுறுத்தப்பட்டதாகவும், நாட்டை அழிவில் இருந்து மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பட்டியலை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பெலவேகய, அதிபா கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
 இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.