மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு; தொடரும் விசாரணைகள்
நேற்று முன்தினம் (01) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு ஏற்பட்டுள்ள சேதம் 15 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறைச்சாலையின் பல கட்டடங்கள், கூரைகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு கைதிகளால் கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

104 கைதிகள் பூஸா உள்ளிட்ட மேலும் ஏழு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்
அத்துடன் புனர்வாழ்வுத் திட்டங்களின் கீழ் தையல் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் அழிக்கப்பட்டுள்ளன. சம்பவம் இடம்பெற்ற தினம் நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திலிருந்து வெளிப்புறத்தை நோக்கி கற்களை வீசியதாகவும், இதனால் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், சில கைதிகள் இணைந்து பதற்றநிலையை முன்னின்று வழிநடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, வன்முறையில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட 104 கைதிகள் பூஸா உள்ளிட்ட மேலும் ஏழு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அண்மையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருள் தட்டுப்பாடே இந்த அமைதியின்மைக்கான காரணமாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பதற்றநிலையின் போது சில கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டதுடன், பின்னர் சிறை அதிகாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, மருந்துகள், கூர்மையான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன. மேலும், சுமார் 1,500 கைதிகள் சிறைச்சாலையின் ஒரு பகுதியிலிருந்த மதிலை உடைத்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், அந்த முயற்சியைத் தடுக்க சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கைதிகள் சிறைச்சாலையின் கட்டடமொன்றுக்குத் தீ வைத்ததுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தையும் உடைத்து அங்கிருந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சில கைதிகள் ஏனைய சிறைக் கூடங்களின் பூட்டுகளை உடைத்து கைதிகளை வெளியேறச் செய்ததாகவும், வெளியே வர மறுத்த சில கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.