பூநகரியில் மாவீரர் தின நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும்
2026 ஆம் ஆண்டிற்கான மாவீரர் தினத்தை முன்னிட்டு, சமத்துவக் கட்சியின் பூநகரி பிரதேச செயற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் மாவீரர் தின நினைவேந்தலும், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (20) பூநகரி வாடியடிச் சந்தியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
முன்னாள் போராளி தமிழரசன் தலைமையில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில், முதலில் மாவீரர் நாள் நினைவேந்தல் பொது உருவப்படத்துடன் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மாவீரர் தின பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, நிகழ்வில் கலந்துகொண்ட ஏனையோரும் திருவுருவப் படங்களுக்கு சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
தொடர்ந்து, மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், நினைவுப் பரிசில்களாக மரக்கன்றுகளும், ஆடைகளும் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் அரசியல்துறைப் போராளி வேங்கை நினைவுரையாற்றினார். நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், சமத்துவக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.