பெண்களுடன் தப்பியோடிய சொகுசு கார்; துப்பாகிச்சூடு நடத்தி துரத்திப்பிடித்த பொலிஸார்
குருநாகல் கிரிவுல்ல பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் சென்ற சொகுசு கார் ஒன்றை பன்னலை நகரத்தில் வைத்து சுற்றி வளைத்து, அதன் சாரதி மற்றும் இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிரிவுல்ல பகுதியில் வைத்து குறித்த சொகுசு காரைப் பரிசோதிப்பதற்காக நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் கட்டளையிட்டபோதிலும், சாரதி காரை அதிவேகமாகச் செலுத்தி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

துரத்திப்பிடித்த பொலிஸார்
இதனையடுத்து காரைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், காரை நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் சிக்னல் செய்த போதிலும் சாரதி பொலிஸாரின் கட்டளையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து காரைச் செலுத்தியுள்ளார்.
இதனால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதிலும், கார் நிறுத்தப்படாமல் முன்னோக்கிச் சென்றுள்ளது. தொடர்ந்து, பன்னலை நகரில் வைத்து பொலிஸ் ஜீப் வண்டி மற்றும் மேலும் சில வாகனங்களைக் குறுக்காக நிறுத்தி பொலிஸார் குறித்த காரை சுற்றிவளைத்து மறித்துள்ளனர்.
வாகனம் நிறுத்தப்பட்ட போதிலும் சாரதி காரின் கதவுகளைத் திறக்கவில்லை. இதனால் பொலிஸ் அதிகாரிகள் ரி56 துப்பாக்கிகளைக் காண்பித்து கதவைத் திறக்குமாறு உத்தரவிட்ட போதிலும் சாரதி அதனை மறுத்துள்ளார்.
இதன் காரணமாக, பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் காரின் இடதுபுற முன்னங்கண்ணாடியை உடைத்த பின்னரே சாரதி கதவைத் திறந்துள்ளார்.
காரில் இருந்த சாரதி மற்றும் இரண்டு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இதன்போது சாரதியிடம் இருந்து சிறிய அளவிலான போதைப்பொருளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் வாழைத்தோட்டம் அல்லது கிரிவுல்ல பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கிரிவுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.