யாழில் Lunch Sheet பயன்பாடு முற்றாகத் தடை! மீறினால் கடும் நடவடிக்கை
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்சீற் (Lunch Sheet) பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஊர்காவற்துறை சபையின் தவிசாளர் அன்னராசா அன்னலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1.1.2026 தொடக்கம் இந்த விடயம் அமுலுக்கு வந்ததாக ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார், இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சட்ட ரீதியான நடவடிக்கைகள்
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் சூழல் மாசடைவைத் தடுக்கும் நோக்கோடும், இப்பிரதேசத்தின் தூய்மையைப் பேணும் வகையிலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, லஞ்சீற் பாவனையானது மண்ணுக்கும், கடலோரச் சூழலுக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதை அவர் சுட்டிக்காட்டினார்.
சபையினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி, வர்த்தக நிலையங்களிலோ அல்லது பொது இடங்களிலோ லஞ்சீற் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இது குறித்த கண்காணிப்புப் பணிகளைச் சபையின் சுகாதாரப் பிரிவினர் மற்றும் அதிகாரிகள் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சூழலைப்பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்திற்குப் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.