இலங்கைக்கு அருகில் தாழமுக்கம்; காலநிலை தொடர்பில் வந்த அறிவிப்பு
இலங்கைக்கு அருகில் உருவாகியுள்ள தாழமுக்க நிலை காரணமாக தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய காலி தொடக்கம் பொத்துவில் வரையான மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 20 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் காங்கேசன் துறையிலிருந்து புத்தளம் , கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோ மீற்றர் அதிகரிக்கக் கூடும் என்றும், அதே போன்று அந்த கடற்பரப்பில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மீனவர்கள் மீன்பிடி செயற்பாடுகளின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் முழுவதும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அகலவத்தை பாலிந்தநுவர புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அகலவத்தை குடலிகம, பதுரெலிய மகுர, புலத்சிங்கள பறகொட வீதியின் சில பகுதிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
இதன் காரணமாக கலவான, அத்வெல்தொட்ட, மொறப்பிட்டிய, கெலிங்கந்த மற்றும் திகன போன்ற பிரதேசங்களுக்கான வழமையான போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. மேலும் தாழ்நிலப் பகுதிகளில் காணப்படும் சில வீடுகளும் நீரில் மூழ்கி உள்ளதால் இப்பிரதேச மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.


