பொத்துவிலுக்கு 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இன்று (08) காலை ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலைத் தொகுதி தற்போது பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 300 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதுடன், அடுத்த சில மணித்தியாலங்களில் இது கிழக்குக் கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்தார்.

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை, 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதுமட்டுமல்லாது வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் இதர கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.