லொஹான் ரத்வத்தையை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது அவரது கால்களை நக்கவா?
தமிழ் அரசியல் கைதிகளை தனது சப்பாத்தை நக்கி சுத்தப்படுத்தவைத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது அவரது கால்களை நக்கவா? என கேள்வியெழுப்பியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்.
லொஹான் ரத்வத்தை ஒரு கனவான் அரசியல்வாதியல்ல, கழிசறை அரசியல்வாதி என்றார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் 26.09.2021அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஒரு கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது. இலங்கையின் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை கடந்த சில நாட்களாக தமிழ் மக்கள் மத்தியில் தூற்றப்பட்டவர். அவர் நேற்றையதினம் (25) மட்டக்களப்புக்கு வந்து கட்சி அரசியலில் ஈடுபட்டிருக்கின்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மட்டக்களப்பு அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் சந்திப்பினை நடாத்திவிட்டுச்சென்றுள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலையில் மதபோதையில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன்பாக முழந்தாளிடவைத்து துப்பாக்கியை தலையில் வைத்து அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, அதற்கும் மேலாக தமிழ் அரசியல்கைதிகளை தனது சப்பாத்தினை நக்குமாறு கோரி அவமானப்படுத்தியிருந்தார்.
அவ்வாறான ஒருவரை மட்டக்களப்புக்கு அழைத்துவந்து சந்திப்பினை மேற்கொண்டதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாவின் குற்றச்சாட்டினால் கோபமடைந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரன், லொகான் ரத்தவத்தவின் மட்டக்களப்பு விஜய செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளரை மிரட்டியுள்ளார்.
அந்தச் செய்தியில் லொகான் ரத்வத்தேவுக்கு செங்கம்பள வரவேற்று என்று குறிப்பிடப்பட்டதை சுட்டிக்காண்பித்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள குறிப்பிட்ட அந்த ஊடகம், 'செங்கம்பள வரவேற்பு' என்ற சொற்றொடர் சிறந்ததொரு வரவேற்பிற்கான 'சிலேடை வாக்கியம்' என்பது ஒரு பிரபலமான தமிழ் ஆசிரியரான உங்களுக்குத் தெரியாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தது.
தமிழ் அரசியல்கைதளை அவமானப்படுத்திய லொகான் ரத்தவத்தை மட்டக்களப்புக்கு அழைக்கப்பட்டதையும், கிழக்குப் பிரதிநிதிகளுடன் அமர்த்தப்பட்டு அவருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதையும், வடக்கையும் கிழக்கையும் உணர்வு ரீதியாகப் பிரிக்கின்ற சதிக்கான ஒரு அங்கமாக நீங்கள் பார்க்கவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்த ஊடகம், தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவேண்டியது ஒரு ஊடகத்தின் கடமை என்பதன் அடிப்படையில் லொகான் ரத்வத்தையின் செய்தியைப் பிரசுரித்த ஊடகத்தின் மீது ஏன் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள் என்றும் வினவியிருந்தது.
லொகன் ரத்வத்தேயின் மட்டக்களப்பு விஜயம் பற்றிய செய்தியையும், அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் யார் யார் கலந்துகொண்டார்கள் என்ற செய்தியையும் ஊடகம் இருட்டடிப்பு செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா என்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம் அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.