வீதி விபத்துக்களில் பறிபோகும் உயிர்கள்; 24 மணி நேரத்தில் நால்வர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதன்படி நிட்டம்புவ, வலப்பனை, கிளிநொச்சி மற்றும் மத்தேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நேற்று (06) தெரிவித்தனர்.
பறிபோகும் உயிர்கள்
வலப்பனை, நில்தண்டாஹின்ன, கலகன்னவத்தை, குறுகிய வளைவு மற்றும் செங்குத்தான வீதியில் மாளிகதென்ன கல்பொத்தவில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பெக்ஹோ இயந்திரம் ஒன்று அதன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 09 மீற்றர் தூரத்தில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதி பரந்தன் பகுதியில் வீதியின் இடதுபுறத்தில் பயணித்த பஸ் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா நெலும்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மத்தேகொட, கிரிகம்பமுனுவ மற்றும் சல்கஸ் சந்திக்கு இடையிலான பிரதான வீதியில் மத்தேகொட நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பாதசாரி பெண் மீது கார் மோதியதில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் நிட்டம்புவ நகரில் பாதசாரி கடவையை கடந்த பெண் மீது வேன் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த அத்தனகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய பெண் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.