இரண்டு கைகளையும் தூக்கி ஆதரவு வழங்குவோம்! சபையில் மனோ தெரிவித்த தகவல்
தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பள விவகாரத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடுத்துள்ள வழக்கில் எமக்கு சாதகமான தீர்வு கிடைக்காது போனாலும் விசேட சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றுவதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கூறினார்.
அவ்வாறு முயற்சித்தால் இரண்டு கைகளையும் தூக்கி ஆதரவு வழங்குவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சபையில் தெரிவித்தார்.
தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய வேளையில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்ட பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கின்றது என்பதும், மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா கிடைகின்றது எனவும் கூறப்பட்டாலும் அது வெறும் கதை மட்டுமேயென்பது சகலருக்கும் தெரிந்ததே.
ஏனென்றால் தோட்டத்தொழிலாளர்களுக்கு அதிக பட்சம் 12,13 நாட்களே வேலை கிடைக்கின்றது. எனவே 12 ஆயிரம் அளவிலேயே அவர்களுக்கு சம்பளம் கிடைக்கின்றது. எனவே இது வெறும் மாயை என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தில் குறைந்த பட்ச வேதனமாக 500 ரூபாவாக கூறப்பட்டுள்ளது, இதனை ஆயிரம் ரூபாவாக மாற்றினால் சிறந்தது என நினைக்கிறோம்.
எனவே இதனை கருத்தில் கொண்டு ஆராய வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். இப்போது நீதிமன்றத்தில் நியாயமான தீர்மானம் கிடைக்காது போனால் விசேட சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றுவதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கூறினார். அவ்வாறு முயற்சித்தால் இரண்டு கைகளையும் தூக்கி ஆதரவு வழங்குவோம்.
அதேபோல் பணியாளர்களின் குறைந்த வயதெல்லை குறித்து ஏற்கனவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டது, அதனை 18 வயதாக்கினால் அதற்கும் நாம் ஆதரவு வழங்குவோம். எமக்கும் இந்த மாற்றங்கள் அவசியம். நாடளாவிய ரீதியில் இந்த இவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆகவே அதற்கு ஒரு விடை கிடைக்கும் என நம்புகின்றோம்.
நாம் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் என்ற ரீதியில் எமது மக்களின் பிரச்சினை குறித்து தெரியும். மலையகத்தில் இருந்து சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
குறைந்த வயதில்லையை கொண்டவர்கள் பணிக்கு அமர்த்தினால் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.