வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை ; அச்சத்தில் மக்கள்
ஹட்டன் - கினிகத்தேனை பகுதியில் வீடொன்றில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடிச் சென்ற சிசிடிவி காணொளிகள் வெளியாகி பிரதேச மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக, தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அச்சத்தில் மக்கள்
இந்த நிலையில், கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களில் ஒன்றை, சிறுத்தை நேற்றிரவு இழுத்துச் செல்வது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சிறுத்தைகளின் நடமாட்டம் தோட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளதன் காரணமாக, அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, நாய்களை வேட்டையாடும் சம்பவம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனால் மேலும் அச்சம் அடைந்துள்ள அந்த பகுதி மக்கள், குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வரும் சிறுத்தையைக் கண்காணித்து, கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.