'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம்
இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் திரித்தாலாவில் உள்ள பருத்தூர் அரச மேல்நிலைப் பாடசாலையில், 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவர் காயமடைந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது, குறித்த மாணவர் தனது பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சக மாணவர்களிடம் காட்டியுள்ளார்.

வழக்குப் பதிவு
நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தின் துப்பாக்கிச் சூட்டுக் காட்சியைப் போன்று நடித்துக்கொண்டு, அதனை ரீல்ஸ் காணொளியாகப் பதிவு செய்ய அவர் முயன்றுள்ளார்.
இதன்போது எதிர்பாராத விதமாகத் துப்பாக்கி வெடித்து, முதல் குண்டு வகுப்பறையின் சுவரில் பாய்ந்துள்ளது. சுமார் 10 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் துப்பாக்கியை எடுத்துச் சினிமா பாணியில் நடித்துக் காட்ட முயன்றபோது, அருகில் நின்றிருந்த சக மாணவரின் தோள்பட்டை மற்றும் அக்குள் பகுதிக்கு இடையில் தோட்டா பாய்ந்துள்ளது.
காயமடைந்த மாணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டுள்ளது.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினரின் விசாரணையில், குறித்த துப்பாக்கி மாணவரின் மறைந்த தாத்தாவுக்குச் சொந்தமான பழைய 0.22 ரக துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.
காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக தாத்தா அதனை வைத்திருந்ததாகவும், வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை மாணவர் யாருக்கும் தெரியாமல் பாடசாலைக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கியுடன் 12 தோட்டாக்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, துப்பாக்கியைப் பயன்படுத்திய மாணவர் சிறுவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், உரிய உரிமமின்றி துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவரின் தாயாருக்கு எதிராகவும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள மாநிலக் கல்வி அமைச்சர், பொதுக் கல்வித்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.