கசிப்பு உற்பத்தி; பொலிசாரிடம் இருந்து ஓடியவர் உயிரிழப்பு
திருகோணமலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை , சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்ட வேளை ஆற்றில் இறங்கி தப்பியோடியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா உப்பாறு களப்பு பகுதியை அண்டிய காட்டுப்பகுதிக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்தினை சுற்றி வளைத்த போது , கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அந்நிலையில் , சிறிய படகு , அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் , கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுத்தப்பட்ட உபகரணங்கள் , 70 லீட்டர் கசிப்பு என்பன மீட்கப்பட்டிருந்தன.
அதேவேளை , நேற்றைய தினம் ஆற்றில் இறங்கி தப்பியோடியவர் காணாமல் போன நிலையில் , இன்றைய தினம் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.