அமெரிக்கா ஹோட்டல் ஒன்றில் பாலியல் சேவைபெற சென்ற இலங்கை தேரர்! வெளியான தகவல்
அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பொலிஸ் சோதனையின் போது பாலியல் சேவைகளைப் பெற முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஏழு பேரில், இலங்கையைச் சேர்ந்த பௌத்த தேரர் ஒருவரும் அடங்குவதாக பொஸ்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அமெரிக்காவில் வசிக்கும் 32 வயதான மஹாயாயே வினீத என்ற தேரரே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை Revere ஹோட்டலில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பொஸ்டன் பொலிஸாரால் விசேட நடவடிக்கை
FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, மனிதக் கடத்தல் மற்றும் தவறான தொழில் ஒழிப்புக்காக பொஸ்டன் பொலிஸாரால் Operation Red Card என்ற விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே ஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மஹாயாயே வினீத தேரர் உட்பட கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களுக்கும் எதிராக, பணத்திற்கு பாலியல் சேவைகளைப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொஸ்டன் மத்திய மாநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தேரர் அமெரிக்காவின் Tufts பல்கலைக்கழகத்தில் பௌத்த மத ஆலோசகராகப் பணியாற்றி வந்தவர் என கூறப்படுவதுடன், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தேரர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹாயாயே வினீத துறவி, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Tufts பல்கலைக்கழகத்தின் பௌத்த மத ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் பௌத்த தியானச் சங்கத்திற்கு வழிகாட்டுதல், தியான நிகழ்ச்சிகள் மற்றும் போதனைகளை நடத்தும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இலங்கையில் பிறந்த அவர், தனது 10 ஆவது வயதில் துறவறம் பூண்டுள்ளார். அத்துடன், 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் புகழ்பெற்ற Harvard Divinity பாடசாலையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் எனவும் கூறப்படுகின்றது.