யாழ்ப்பாணத்தில் காணி மோசடிகள்; பொலிஸாருக்கு வடக்கு ஆளுநர் பாராட்டு!
யாழ்ப்பாணத்தில் காணி மோசடிகள் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக பொலிஸார் எடுத்த நடவடிக்கையை வரவேற்ற , வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இந்த நடவடிக்கையினை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கும் பணிப்புரை விடுத்தார்.
போதைப்பொருள் , சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி
வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை (10) நடைபெற்றது.
கலந்துரையாடலின் போது, பொலிஸாரின் நடவடிக்கையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்த ஆளுநர் , சில பொலிஸ் நிலையங்களில் மக்கள் முறைப்பாடுகள் ஏற்கப்படாமல் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி என்பன இடம்பெறுவதாகவும் மாவட்டச் செயலர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.