கிழக்கில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாம் இருந்த காணி பொதுமக்களிடம் ஒப்படைப்பு!
அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
1990 முதல் இயங்கிய இந்த முகாம், கடந்த நேற்று (10) காரைதீவு பிரதேச செயலாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடமும், தனியார் காணி உரிமையாளர் ஜி. அருணனிடமும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுர அரசின் நடவடிக்கை
முன்னர் இந்தக் காணியில் காரைதீவு பிரதேச சபை மற்றும் பொது நூலகம் இயங்கியிருந்த நிலையில் இராணுவ முகாம் அமைந்ததால், இவை வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு இடவசதி இன்றி சிரமப்பட்டனர்.
வட-கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களைக் குறைக்க அரசு எடுத்த அமைச்சரவை தீர்மானத்தின் கீழ் இந்த முகாம் அகற்றப்பட்டது.
இதற்கு முன், பொதுமக்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முகாமை அகற்றி, காணியை மீள ஒப்படைக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களிலும் குரல் எழுப்பியிருந்தனர்.
தற்போது, காரைதீவு முகாமில் இருந்த இராணுவத்தினர் கல்முனை முகாமுக்கு இடம்பெயர்ந்துள்ள அதேவேளை மாவட்டத்தில் உள்ள சில இராணுவ முகாம்கள் கட்டமாக அகற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி கையளிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

