சிறுவர்களிற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை
கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் கொரோனா வார்ட்டானது அதன் அதிகபட்ச திறனை அடைந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர். ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 70 குழந்தைகள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர், மேலும் மருத்துவமனையில் தினமும் சுமார் 15 தொற்றாளர்கள் பதிவாகின்றனர் என அவர் தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் அதிகபட்ச திறன் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டமையால், சில சிறுவர்கள் ஏனைய மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு சுகாதார அமைச்சின் ஊடாக ராஜகிரியவில் தனி கட்டிடத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.