குடு சலிந்து வழக்குக் கோப்புகள் மாயம் ; 7 பெண் அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை
‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த இரண்டு முக்கிய வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் 10 நீதிமன்ற ஊழியர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

தீவிர விசாரணை
இவர்களில் 7 பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
காணாமல் போன கோப்புகளில், குடு சலிந்துவின் வழிநடத்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதப் படுகொலை தொடர்பான வழக்கும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கோப்பும் அடங்குகின்றன.
கடந்த 28ஆம் திகதி வழக்கிற்கான அறிக்கையைத் தேடியபோது அது கிடைக்காததால், உப கோப்பின் மூலம் 31ஆம் திகதி மீண்டும் வழக்கை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே பிரதான கோப்புகள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டது.
ஆவணங்களின் பிரதிகளைப் பெறுவதற்காக அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோப்புகள் காணாமல் போயுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்து, கோப்புகள் எவ்வாறு காணாமல் போயின என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.