கடற்கரையில் மீட்கப்பட்ட கத்தி - கைகள்: அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த நபர்!
கொழும்பு - மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் மின்னியலாளர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கைகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கத்தி எகொடஉயன மோசஸ் வீதியிலுள்ள கடற்கரையில் கற்களுக்கு இடையில் இருந்து இன்று (26-03-2023) காலை மீட்கப்பட்டுள்ளது.
எகொடஉயன மோசஸ் வீதியிலுள்ள கடற்கரையில் கற்களுக்கு இடையில் இருந்து இன்று (26-03-2023) காலை குறித்த கத்தி மீட்கப்பட்டுள்ளது என கல்கிஸை பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும், வெட்டப்பட்ட இரண்டு கைகளையும் அந்த இடத்திலேயே கடலில் வீசிவிட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தேகநபர் தனது சட்டத்தரணியுடன் கல்கிசை நீதவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (24-03-2023) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதனடிப்படையில் இன்றையதினம் (26-03-2023) நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இரு அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக நபரொருவரின் கைகளை முழங்கையுடன் வெட்டி எடுத்துச்சென்ற சந்தேகநபரை கைது செய்ய மொரட்டுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (21-03-2023) இரவு மொரட்டுவ, கொரலவெல்ல பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் 40 வயதுடைய நபரின் கைகளைத் துண்டித்துள்ளார்.
இச் சம்பவத்தில் கொரலவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் மின்னியலாளர் ஒருவரே கைகளை இழந்திருந்தார்.
பாதிக்கப்பட்ட நபரை மீட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் பிரதேசவாசிகள் அனுமதித்துள்ள போதும் கைகளை எடுத்துச் சென்றிருந்தால் அவற்றை ஒட்டவைத்திருக்க முடியும் என்று வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.