பொலிஸாரை கத்தியால் குத்திய சந்தேகநபர் ; சினிமா பாணியில் சுட்டு பிடித்த பொலிஸார்
காலி மாவட்டத்தில் தெலிகட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடங்கொட பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் காயமடைந்துள்ளதாக தெலிகட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மதுபானம் உற்பத்தி
சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தெலிகட தொடங்கொட பிரதேசத்திற்கு பொலிஸ் குழு ஒன்று சென்றுள்ளது.
இதன்போது, சம்பவ இடத்தில் நான்கு பேர் சட்டவிரோத மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரிகள் சிலரை கத்தியால் குத்தியுள்ளார்.
தற்காப்புக்காக பொலிஸார் சந்தேக நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனேகம தெற்கு, பத்தேகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெலிகட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.