மன்னாரில் தனியார் பேருந்தில் மீட்கப்பட்ட மர்ம பொருள்!
மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து கேரள கஞ்சா பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (30-01-2023) திங்கட்கிழமை மதியம் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் உள்ள சோதனை சாவடியில் வைத்து குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் கஞ்சா பொதிகள் இருப்பதாக தள்ளாடி இராணுவ தலைமையகத்திற்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், இன்று குறித்த தனியார் பேருந்து மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டு, மோப்ப நாயின் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பேருந்தின் பின் ஆசனத்திற்கு முன் பகுதியில் உள்ள ஆசனத்தின் கீழே காணப்பட்ட இரும்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட பொதி ஒன்றை எடுத்து சோதனை செய்தனர்.
இதன்போது குறித்த பொதியில் சுமார் 380 கிராம் கேரள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தின் பின் இருக்கையில் இருந்த 4 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.