நடமாடும் டீசல் விற்பனை நிலையம் ; சுற்றிவளைத்து பிடிப்பு
கேகாலை - அம்பேபுஸ்ஸ பகுதியில் 1200 லீற்றர் டீசலை சட்டவிரோதமாக விற்று வந்த நடமாடும் வாகனமும், ஒரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை பிரிவு பொறுப்பு சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனுருத்த பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் செயல்பட்ட ஒரு சிறப்பு காவல்துறை குழு இந்த சோதனையை நடத்தியது.

ரூ. 100 முதல் 150 வரை கூடுதலாக வசூலித்து டீசலை விற்பனை
சம்பந்தப்பட்ட பாரவூர்தியின் பின்புறத்தில் ஒரு சிறப்பு தொட்டி பொருத்தப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்து வெளியேறும் டீசலின் அளவை அளவிட ஒரு மீட்டரும் நிறுவப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
சந்தேக நபர், வாங்குபவர்கள் இருந்த அதே இடத்திற்குச் சென்று, சாதாரண சந்தை விலையை விட ரூ. 100 முதல் 150 வரை கூடுதலாக வசூலித்து டீசலை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
சோதனையின் போது, அந்த வாகனத்தில் 1200 லீற்றர் டீசல் இருந்ததாகவும், அதன் ஓட்டுநரும் பாரவூர்தியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.