காவிந்த ஜயவர்த்தனவின் குற்றச்சாட்டும், சிறிதரனின் பதிலடியும்
இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.
கல்வி சீர்திருத்தம் தொடர்பான விடயங்கள் அண்மைய நாட்களில் நாட்டில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானத்தையடுத்து ஏற்பட்டிருந்த அதிர்வலைகள் கொஞ்சம் கொஞ்சமாக தனிந்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக வலியுறுத்தி வந்த தரப்பினரும் தமது போராட்டங்களையும் வாதங்களையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதை காணமுடிகிறது.
எனினும் அண்மையில் எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் தீர்மானத்துக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் விதமாக கையெழுத்து வேட்டை ஒன்றை தமக்குள்ளேயே மேற்கொண்டிருந்தன.

எனினும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி ஒன்றிணைந்த எதிர்க் கட்சிகளின் தீர்மானத்தில் இருந்து சற்று விலகியே இருந்தது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதில், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்த்தரப்பின் சில உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து சேகரிப்புக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்குமான நடவடிக்கைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணைந்து கொள்ளவில்லை என அவர் கூறியிருந்தார்.
பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குரிய சரியான ஆதாரங்களை எவரும் இதுவரை வெளியிடாததை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியான பழிவாங்கலை ஒரு சிலர் முன்னெடுப்பதாக சிறிதரன் குற்றம் சுமத்தினார். கட்சியில் உள்ளவர்கள் கலந்துரையாடி நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான கடிதத்தில் கையொப்பமிடவில்லை என அவர் குறிப்பிட்டார்.
மேலும் பிரதமருக்கு எதிராக குறித்த பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாகவும் சிறிதரன் கூறினார்.
இது இவ்வாறு இருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன, ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சிறிதரன் மட்டுமே இந்த தீர்மானத்தை கொண்டுள்ளார் என்றும் தமிழரசுக் கட்சியில் உள்ள மற்றவர்கள் தங்கள் முயற்சியை ஆதரிப்பார்கள்" என்றும் கூறியுள்ளார்.
காவிந்த ஜயவர்த்தனவின் இந்த கருத்துத் தொடர்பில் சூரியன் செய்திப் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை தொடர்பு கொண்டு வினவியது.
தமது நிலைப்பாடு மாத்திரமின்றி கட்சியின் நாடாளுமன்ற குழு ஒன்றுகூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த 7 ஆம் திகதி கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தமது கட்சி உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் அறிவித்தல் ஒன்றையும் வழங்கியதாக சிறிதரன் குறிப்பிட்டார்.
பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இருந்து விலகியிருக்கவும் கல்வி சீர்திருத்தம் மற்றும் அந்த பிரேரணை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கவும் கட்சி உறுப்பினர்களுக்கு தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் காவிந்த ஜயவர்த்தனவின் கருத்துத் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.