கசகசா பற்றி அறிந்ததும் அறியாததுமான சில சுவாரஸ்யங்கள்
உணவில் மசாலா பொருளாக பயன்படுத்தப்படும் கசகசா, ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. நரம்பு தளர்ச்சியை குணப்படுத்துவது முதல் இதயத்தை வலுவாக்குவது வரை இதில் பல ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் இருக்கின்றது.
கசகசா என்னும் சின்னஞ்சிறு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிவதில்லை. இவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பல இருக்கும் நிலையில் அதன் நன்மைகள் எவை என நாம் இங்கு பார்ப்போம்.
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் கசகசா பொட்டாசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இதன் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் காரணமாக, ஆயுர்வேதத்தில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியம்
கசகசாவில் நிறைவுறா கொழுப்புகள் உள்ளதால், கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, மாரடைப்பு பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
நரம்பு தளர்ச்சி
நரம்பு சுவர்களை வலுப்படுத்தும் ஆற்றல் கசகசாவிற்கு உண்டு. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கசகசாவை ஊறவைத்து அரைத்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்துவதால், முழுமையான ஊட்டச்சத்தை பெறலாம்
செரிமான ஆரோக்கியம்
கசகசாவில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலத்திற்கு தேவையான, பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தூக்கமின்மை
உடல் ஆரோக்கியத்திற்கு ஆறு முதல் ஏழு மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம். இந்நிலையில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கசகசா பால் அருந்தி வருவது நன்மை பயக்கும். மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கசகசாவிற்கு உண்டு.
எலும்பு ஆரோக்கியம்
கசகசாவில் கால்சியம் மற்றும் புரதம் அதிக அளவில் உள்ளதால், எலும்பு அடர்த்தியை அதிகரித்து, தசையை வலுவாக்கி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்
தைராய்டு பிரச்சனை
கசகசா விதைகளில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய, துத்தநாகச் சத்து அவசியம் என்பதால், கசகசாவை தொடர்ந்து உட்கொள்வது, தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்ய உதவும்.