கரூர் சம்பவம் ; காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தவெக தலைவர் விஜய்
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி செப்டம்பர் 27ஆம் திகதி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேற்று (27) தவெகவினர் மாமல்லபுரத்திலுள்ள தனியார் விடுதியில் வைத்து சந்தித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் விஜய் மனம் உடைந்து மன்னிப்பு கோரியதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் காலில் விழுந்து அழுததாகவும் கைகூப்பி அழுததாகவும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினரொருவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

பைத்தியக்காரர் மாதிரி இருக்கிறார்...
இந்த சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பொது நிகழ்வாக அல்லாமல் தனியார் நிகழ்வாகவே நடத்தப்பட்டிருந்தது.
அதில் விஜய் மிகவும் வருந்தியதாகவும், ஒவ்வொரு குடும்பத்தையும் தனித் தனியாக சந்தித்ததாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து விஜய்யை சந்தித்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
“உங்களை இங்க வர வைத்தது என்னுடைய தவறு என்று காலில் விழுந்தார். ரொம்ப இளச்சு போய்விட்டார் விஜய் , பைத்தியக்காரர் மாதிரி தோற்றத்தில் இருக்கிறார். என்ன பண்ணி என்ன பண்றது எங்க புள்ளை எங்க கூட இல்ல” என கூட்டநெரிசலில் தனது பிள்ளையை பறிகொடுத்த தந்தை தனது உருக்கத்தை வெளியிட்டுள்ளார்.
உங்களின் குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள். நான் கட்டாயம் உங்களுடன் இருப்பேன் என தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.